எனக்கு கொலை மிரட்டல் வருகிறது- கண்ணீர் மல்க வீராங்கனை வினேஷ் போகத் குற்றச்சாட்டு...!
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா
நேற்று டெல்லியில் திடீரென வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த வீரர் பஜ்ரங் பூனியா.
இது குறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா செய்தியாளர்கள் பேசுகையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர்.
மேலும் கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். நம்மைச் சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை.
நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
தூக்கில் தொங்க தயார்
இதற்கு பதில் அளித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை.
அப்படி எதாவது நடந்திருந்தால் நான் தூக்கில் தொங்க தயார். எனது பெயர் கெடுப்பதற்காக இப்படி செய்தால், நான் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்றார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில், 28 வயதான வினேஷ் போகத் நிருபர்களிடம் கண்ணீர் மல்க பேசுகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய போது சில விஷயங்களை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றதால் ஆத்திரத்தில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்றார்.