குப்பை லாரியில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் - நகராட்சி ஊழியர்களுக்கு கண்டனம்
விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற நகராட்சி ஊழியர்களின் செயல் ஆந்திராவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே ஆந்திர மாநிலம் குண்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் தாங்கள் தயார் செய்த விநாயகர் சிலைகளை குண்டூர் நகரிலுள்ள சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் இங்கு விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்று கூறி அவற்றை குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர். இதனால் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.