நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - பக்தர்கள் கொண்டாட்டம்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான இன்று விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாடப்படுகிறது.
மக்கள் ஒருகாரியத்தை தொடங்கும் முன்பு முழு முதற்கடவுளான விநாயகரை போற்றி வணங்குவர். விநாயகரை துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று எருக்கம்பூ மாலை அணிவித்து, சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து பக்தியுடன் வணங்குவார்கள்.
இந்நிலையில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.