என் அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க : மனு கொடுக்க வந்த கன்றுக்குட்டி
தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்று குட்டி கழுத்தில் பதாகை அணிந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பசுவின் உரிமையாளர் மனு அளித்தார்.
காணாமல் போன கன்றுக்குட்டி
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் பசுமாடு கன்றுக்குட்டியை தனக்கு சொந்தமாக நிலத்தில் இருந்த மாட்டு கொட்டகையில் மாலை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரவு மீண்டும் மாட்டுகொட்டகைக்கு சென்றபோது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் பசுவின் உரிமையாளர் கோவிந்தன் கடந்த 19 ஆம் தேதி கஞ்சனூர் காவல்துறையில் புகார் அளித்தார்.
நூதன முறையில் புகார்
ஆனால் கடந்த 14 நாட்களாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகின்றது.ஆகவே பசுவை தேடி கண்டு பிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றின் கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை கழுத்தில் அணிய வைத்து கன்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுபிடித்து தருகிறோம் என கூறியதை தொடர்ந்து கோவிந்தன் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.