பரந்துார் விமான நிலைய விவகாரம் - கிராம மக்கள் மொட்டை அடித்து திருவோடு ஏந்தி போராட்டம்
சர்வதேச இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய பிரதமரிடம் நிதி ஒதுக்க கோரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டித்து ஏகனாபுரம் மக்கள் மொட்டை அடித்து திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், 2வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நான்கு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச புதிய விமான நிலைய அமைக்க, அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5000 விளை நிலங்கள் எடுக்கப் பட திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
அதனால், அந்த கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன் வைத்தும், இந்த கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது எனக்கூறி, இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு, தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 264 வது நாளாக இரவு நேர அற வழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல் , புதிய சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன், பரந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட 3 ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் என அனைவரும் சேர்ந்து விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என கூறி ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஐந்தாவது முறையாக ஒரு மனதாக முடிவு எடுத்து தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இட்டனர். ஏற்கனவே சுதந்திர தினம், மே தினம், உள்ளாட்சி தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் ஆகிய ஐந்து முறை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விமான நிலையம் வருவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் எந்த விதமான முன்னறிவிப்பு அரசாணையோ வெளியிடாத போது அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமசந்திரன் சட்ட பேரவையில் பேசியது கண்டிக்கத்தக்கது என கூறி தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் பள்ளிக்கூடத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மீனம்பாக்கம் புதிய விமான நிலையம் விரிவாக்கம் துவக்க நிகழ்ச்சிக்கு வந்த பாரத பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பரந்தூர் விமான நிலையம் செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 264 நாட்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்,
தமிழக முதலமைச்சரின் இந்த கோரிக்கையை கண்டித்தும் எந்தவித அரசு ஆணை வெளியிடாமல் தமிழக அரசு செயல்படும் விதம் கண்டித்தும் 264 வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அம்பேத்கர் சிலை முன்பு ஆண் பெண் என இருபாலரும் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடித்து , திருவோடி ஏந்தி பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்று வருவதால் இங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்