மதுரை அருகே 2 கிராம மக்கள் வாக்களிக்க மறுத்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழுமலை அருகேயுள்ள உலைப்பட்டி சூளப்புறம் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் அங்குள்ள பட்டியல் மக்களுக்கும் மாற்று சமூகத்திற்கும் இடையே பிரச்சனை முற்றியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தினர் உலைப்பட்டி கிராமத்தில் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இயங்கி வந்த ரேஷன்கடையில் பொருள்கள் வாங்க மறுத்துவிட்டனர். அதனால் அரசு உடனடியாக அவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைத்துக் கொடுத்துள்ளது. தேவேந்திரகுலவேளாளர் மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது.
அங்கு நாங்கள் சென்று வாக்களிக்க மாட்டோம். ஆகையால் எங்களுக்கு தனியாக வாக்குசாவடி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கும் கோட்டாச்சியருக்கும் மாற்று சமூகத்தினர் இரண்டு மாதத்திற்கு முன்பே மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று வரைக்கும் தனி வாக்குச்சாவடி அமைத்து கொடுக்காததால் உலைப்பட்டி கிராம மாற்று சமூகத்தினரும் அருகிலுள்ள குன்னுவார் பட்டி கிராம மக்களும் இணைந்து நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று ப்ளக்ஸ் போர்டு வைத்து வாக்களிக்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.