இங்க குழந்தை பிறக்கவே கூடாதாம்.. பெண்கள் பிரசவிக்க தடை விதித்த வினோத கிராமம்!
பெண்கள் ஊருக்குள் பிரசவித்தால் அசம்பாவிதம் ஏற்படும் என ஒரு கிராமம் விடாபிடியாக நம்பிக்கொண்டிருக்கிறது.
சபிக்கப்பட்ட கிராமம்
மத்தியபிரதேசம், போபாலில் இருந்து 130கி.மீ தொலைவில் சங்க ஷ்யாம் ஜி என்ற கிராமம் உள்ளது. இங்கு குழந்தைகள் பிறந்து 400 வருடங்கல் ஆகிறது. அங்கு, 16ஆம் நூற்றாண்டில் கோயில் ஒன்று கட்டப்பட்டபோது, ஒரு பெண் கோதுமை அரைக்கத் தொடங்கியுள்ளார்.
அந்த சத்தம் கட்டுமானப் பணிகளை பாதித்ததாகவும் அதனால் கோபமடைந்த, கடவுள்கள் கிராமத்தை சபித்தனர், இந்த கிராமத்தில் எந்த பெண்ணும் பிரசவம் செய்ய முடியாது என்று அந்த ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். கோவில் கட்டும் பணியை ஒரு பெண் சீர்குலைத்ததால், அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்களின் மீது சாபம் ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர்.
அதிர்ச்சி பின்னணி
தற்செயலாக பிரசவங்கள் நடந்தாலும் குழந்தை சிதயும் அல்லது இறந்துபோகும் என சொல்லுகின்றனர். தொடர்ந்து இந்த நிலையை சமாளிக்க குழந்தை பிரசவத்திற்காக கிராமத்திற்கு வெளியே ஒரு அறையைக் கட்டியுள்ளனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த, நரேந்திர குர்ஜார் என்பவர் கூறுகையில்,
90 சதவீத பிரசவங்கள் கிராமத்திற்கு வெளியே மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அவசர காலங்களில் கூட, கிராமத்திற்கு வெளியே தான் பிரசவங்கள் நடக்கின்றன. அங்கு இதற்காக ஒரு தனி அறை கட்டப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காலங்களில் கூட, குழந்தை பிறப்புக்காக பெண்கள் கிராமத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் ஒருவர், இங்கு யாரும் மது அருந்துவது, இறைச்சி சாப்பிடுவது கிடையாது அதுவே தங்கள் கிராமத்திற்கு கடவுள் கொடுத்த வரம் என்கிறார்.