தீபாவளி பண்டிகை இல்லை.. துக்க நாளாக அனுசரிக்கும் ஒரு முழு கிராமம் - என்ன காரணம்?
தீபாவளி பண்டிகை ஒரு கிராமமே துக்க நாளாக அனுசரிக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பண்டிகை
தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த தினமாக இருக்கும். குடும்பத்தோடு புத்தாடை அணிந்து வீதியில் சந்தோஷமாக வெடி வெடித்து நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதுதான் வழக்கம்.
ஆனால் இங்கு ஒரு கிராமமே தீபாவளியை துக்க நாளாக அனுசரிப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 'ராவன்வாடா' என்ற ஒரு பழங்குடியின கிராமம் உள்ளது.
இங்குள்ள பழங்குடியின மக்கள் தசராவுக்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் துக்கம் அனுசரிப்பதால் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை என கூறுகின்றனர். அதாவது புராணங்களின்படி, ராமர், ராவணனை வதம் செய்த பண்டிகை தான் தசரா எனப்படுகிறது.
என்ன காரணம்?
அரக்கனை கொன்று தன் மனைவியை மீட்ட நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. ஆனால் இங்கு மட்டும் இந்த வழக்கம் பின்பற்றபடாததுக்கு பல காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றன.
இது குறித்து அகில இந்திய பழங்குடியினர் மேம்பாட்டு கவுன்சில் மாவட்ட தலைவர் மகேஷ் சாரதி கூறியதாவது, "ராவணன் இறந்ததை, பழங்குடியினர் துக்கமாக அனுசரிக்கின்றனர். மேலும் ராவணனும், மேகநாதரும் தங்களை பேரழிவுகளில் இருந்து காப்பதாக இங்குள்ள கிராம மக்கள் நம்புகின்றனர்" என்றார்.
மேலும், ராவன்வாடா கிராமத்தில் மலை உச்சியில் ராவணன் கோயில் உள்ளது. தசராவையொட்டி, நாடு முழுவதும் தீமையை வென்றதன் அடையாளமாக ராவணன் உருவபொம்மை எரிக்கப்படும்போது, இங்கே ராவணனை வணங்கி நீண்ட துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.