ஜி ஸ்கொயர் விவகாரம் , நசுக்கப்படுகிறதா ஊடகங்கள் ? துணை போகிறதா ஆளும் அரசு ? : நடந்தது என்ன?

By Irumporai May 24, 2022 07:32 AM GMT
Report

சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை மிரட்டியதாக சென்னை நகரக் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், கெவின் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்த புகாரின் அடிப்படையில் பிரபல வார இதழான ஜூனியர் விகடன் இதழ் உட்பட பலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சென்னையிலிருந்து செயல்படும் ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கெவின் என்ற நபரை காவல்துறை கைதுசெய்திருப்பதோடு, ஜூனியர் விகடன் இதழின் உரிமையாளர்கள், யூடியூபர்களான சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு பதிவுசெய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயரைச் சேர்ந்த புருஷோத்தம் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் இ - 1 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தங்களுடைய நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதற்காகவே ஜூனியர் விகடன் இதழும் அதன் இணையப் பதிப்பும் தங்களைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறான அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பதிப்பித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கெவின் என்ற நபர் ஜி ஸ்கொயரின் உரிமையாளரான ராமானுஜத்தை ஜனவரி 18ஆம் தேதி இரவு ஒன்பதே கால் மணியளவில் தொலைபேசியில் அழைத்து, ஜூனியர் விகடன் இதழின் உரிமையாளர் பி. ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் சார்பாக பேசுவதாகக் கூறியிருக்கிறார்.

அப்படிப் பேசும்போது, பத்திரிகையின் உரிமையாளருக்கு தன் மூலமாக 50 லட்ச ரூபாயை வழங்காவிட்டால், வாரமிருமுறை இதழின் அடுத்தடுத்த இதழ்களில் ஜி ஸ்கொயரின் புகழைக் குலைக்கும் விதத்தில் கட்டுரைகள் வெளியாகும் என்று கூறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மிரட்டலை உறுதிப்படுத்தும்விதமாக, ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் அதில் அடுத்த நாள் வெளிவரவிருக்கும் இதழின் படம் இடம்பெற்றிருந்ததாகவும், அதில் ஜி கொயர் நிறுவனம் தொடர்பான அவதூறான கட்டுரை இடம்பெற்றிருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் விவகாரம் , நசுக்கப்படுகிறதா ஊடகங்கள் ?  துணை போகிறதா ஆளும் அரசு ? : நடந்தது என்ன? | Vikatan Savukku Maridhas After Article Real Estate

"கெவின் காட்டிய ஸ்க்ரீன் ஷாட்டில் இருந்ததைப் போலவே அடுத்த நாள் வெளியான வரமிருமுறை இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. ஆகவே, ஜூனியர் விகடனின் உரிமையாளரின் சார்பிலேயே கெவின் எங்களை மிரட்டியிருக்கிறார்" என புகாரில் கூறப்பட்டுள்ளது.

கெவின் மறுபடியும் ராமானுஜத்தை அழைத்து, மாதம் ஐம்பது லட்ச ரூபாய் வழங்காவிட்டால் அடுத்தடுத்து வரும் ஜூனியர் விகடன் இதழ்களில் மேலும் மோசமான கட்டுரைகள் இடம்பெறுவதோடு, சவுக்கு சங்கர், மாரிதாஸ் போன்ற யு டியூபர்கள் மூலமும் குற்றச்சாட்டுகள் பரப்பப்படும் என மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுபோல கட்டுரைகள் வெளியானதால்தான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர் என்ற நிறுவனம் நாசமடைந்து அதன் உரிமையாளர் தற்கொலை செய்ய நேர்ந்தது என கவின் பெருமையடித்துக் கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெவின் மிரட்டினாலும்கூட தாங்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், ஜூனியர் விகடன் இதழில் தொடர்ச்சியாக தங்கள் நிறுவனத்தைப் பற்றி மோசமான கட்டுரைகள் வெளியானதாகவும் இதற்குப் பிறகு ஜூனியர் விகடனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மே 9ஆம் தேதியன்று ராமஜெயம் அலுவலகத்தில் இல்லாதபோது, தங்கள் அலுவலகத்திற்குவந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை கெவின் அனுப்பியதாகக் கூறியிருக்கிறார்.

எதற்காக என்று கேட்டபோது "கெவின் கேட்ட ஐம்பது லட்சம் ரூபாயை மாமூலாக மாதா மாதம் கொடுக்கவில்லை என்றால் உங்களது நிறுவன இயக்குநரைப் பற்றி மேலும் சர்ச்சைக்குரிய பதிவுகளையும் செய்திகளையும் ஜூனியர் விகடன் இதழிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவோம் என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே 15ஆம் தேதி யூடியூபரான மாரிதாஸ் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தங்களுடைய நிறுவனத்தைப் பற்றி மிக மோசமான தகவல்களைக் கூறியிருந்ததாகவும் அந்த வீடியோ கெவினின் மிரட்டலின் தொடர்ச்சியாகவே வெளியிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புகாரை அடுத்து, மைலாப்பூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த காவல்துறை, கெவின், அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூனியர் விகடனோடு தொடர்புடையவர்கள், ஜூனியர் விகடனின் செய்தியாளர், ஆசிரியர், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது.

இதற்குப் பிறகு உடனடியாக கெவின் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த வழக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஜி ஸ்கொயர் விவகாரம் , நசுக்கப்படுகிறதா ஊடகங்கள் ?  துணை போகிறதா ஆளும் அரசு ? : நடந்தது என்ன? | Vikatan Savukku Maridhas After Article Real Estate

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்த பொய்ப் புகாரை வழக்காக பதிவுசெய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது. இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவே கைது நடந்துள்ளது.

மேலும், புகாரில், 3வது குற்றவாளியாக "பத்திரிகையோடு சம்பந்தப்பட்டவர்கள்" என்பது, ஜூனிய் விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.

ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம்.

ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது" என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டண்ம் தெரிவித்துள்ளனர், ஜூனியர் விகடன் மீது பொய் வழக்குப் புனைந்து அச்சுறுத்தும் திமுக அரசின் அதிகார அடக்குமுறை பச்சையான சனநாயகப் படுகொலை என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தன் கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு கண்மூடித்தனமாக செயல்படுவதை விட்டுவிட்டு நியாயமான, நேர்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்' என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.