பெண் என்பதால் புறக்கணிப்பா..? காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் எம்.எல்.ஏ. விஜயதாரணி!
காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று எம்.எல்.ஏ. விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
விஜயதாரணி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி தொகுதி பங்கீடு வரை விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வபெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாஜகவில் சேர உள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு விஜயதாரணி அளித்த பேட்டி ஒன்றில், "விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.
விரைவில் அறிவிப்பேன்
தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை.
தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.