திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரான விஜயலக்ஷ்மி....நெருக்கடியில் சீமான்
சீமான் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலக்ஷ்மி தற்போது திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
விஜயலக்ஷ்மி புகார்
நடிகை விஜயலக்ஷ்மி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றார். சில காலம் கழித்து அது குறித்தான செய்திகள் அடங்கிடும் நிலையில், தற்போது மீண்டும் விஜயலக்ஷ்மி சீமான் மீது சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில் தன்னை சீமான் ஏமாற்றியதாகவும் அவர் விரைவில் கைது செய்யப்படவேண்டும் என்று விஜயலக்ஷ்மி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அதனை தான் கடந்து போக விரும்புவதாக சீமான் பதிலளித்திருந்தார்.
நள்ளிரவு வரை விசாரணை
இந்நிலையில் தான் நேற்று விஜயலக்ஷ்மி அளித்த புகாரின் பேரில் அவரிடம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து கோயம்பேடு துணை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டு, பின்னர் ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்றது.
கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் மற்றும் உதவி ஆணையர் கவுதம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்த நிலையில், அப்போது விஜயலக்ஷ்மி சீமான் கைதாக வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் கோரியதாக தகவல் வெளிவந்துள்ளது.
திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
விசாரணை முடிவடைந்த நிலையில், நடிகை விஜயலக்ஷ்மி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். போலீசார் விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் நீதிபதியிடம் நேரில் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் சீமான், தன் மீது தவறு இருந்தால் கைது செய்யட்டும் என கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் கைதாக வாய்ப்புள்ளதாக அதிகளவில் கூறப்படுகின்றது.