மதுரையில் விஜயகாந்துக்கு முழு உருவச் சிலை..? மேயர் வெளியிட்ட அப்டேட்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு உருவச் சிலை நிறுவுவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்று மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
முழு உருவச் சிலை
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்துக்கு மதுரையில் சிலை நிருவக்கோரி விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு எழுதிய கடிதத்தில் "மதுரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, அரசியலிலும், சினிமாவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்துக்கு மாமதுரையில் முழு உருவச் சிலை அமைத்து நிறுவ வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மேயர் தகவல்
இதற்கு பதிலளித்த மேயர் இந்திராணி, இது குறித்து அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் ஆலோசித்துவிட்டு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜயகாந்த் குடும்பத்தினர் கேட்காமலேயே அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது, மக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசிற்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.