140 தொகுதிகளுக்கு வேட்பாளர் தயார்.! தனித்து போட்டியிடுகிறாரா விஜய்காந்த்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக அதிரடியாக விலகியிருந்தது. கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என சுதீஷ் குற்றம் சுமத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து அமமுக உடனும் மக்கள் நீதி மய்யத்துடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியானது. இதனை கமல்ஹாசனும் உறுதிபடுத்தியிருந்தார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. கமல்ஹாசன் தன்னுடைய கூட்டணியில் பல சிறிய கட்சிகளையும் சேர்த்து வருகிறார். டிடிவி தினகரனும் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தேமுதிகவும் விஜய்காந்தும் என்ன முடிவில் உள்ளனர் என்பது தெரியவில்லை.
வேட்பு மனு தாக்கலுக்கான தேதி நெருங்கி வருகிற நிலையில் முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருந்து வருகிறது.
தற்போது 140 தொகுதிகளுக்கான தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கூட்டணி தொடர்பாக எந்த தரப்புடனும் தீர்வு எட்டப்படவில்லை என்பதால் தேமுதிக தனித்து களம் இறங்கும் முடிவில் இருப்பதாக தெரியவந்துள்ளது