விஜயகாந்த் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சியில் திமுக அரசை பாராட்டிய கேப்டன்

government dmk stalin vijayakanth dream
By Nandhini Jan 07, 2022 04:24 AM GMT
Report

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்த தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்களையும், பராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

மக்களவை, மாநிலங்களவையில் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்படுவதைப் போல தமிழக சட்டப்பேரவையின் நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று தேமுதிக நீண்ட நாள் கோரிக்கையாக வைக்கப்பட்டு வந்தது. இது நாள் வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் சமர்பிக்கப்படும்போதும், ஆளுநர் உரை போன்றவையும் கடந்த காலங்களில் நேரலை செய்யப்பட்டன. ஆனால், அதையும் தாண்டி மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், கேள்வி நேரம் போன்றவை நேரலை செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் தேமுதிக வைத்த நெடுநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது -

சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று 2011-இல் நான் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே வலியுறுத்தியிருந்தேன்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில்தான் முதல் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக் கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் நேற்று முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்த தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால் தமிழக மக்களுக்கு நேரில் காணும் வாய்ப்பு அமையும். சட்டப்பேரவை நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.