’’கண்ணை மூடி கத்தும் கழுதை போல”- தேமுதிகாவை விளாசிய நமது அம்மா
துளிகள் வெளியேறுவதால் கடலுக்கு எந்த நஷ்டமும் இல்லை என தேமுதிக வெளியேறியது பற்றி நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக நேற்று கூட்டணியை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொகுதி உடன்பாட்டில் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது.
அத்துடன் அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் கே.பி .முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல் ஆக இருக்கிறார். அவர் பாமகவின் கொள்கைப்பரப்பு செயலராக உள்ளார் என்று பரபரப்பான பேசினார். விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், அதிமுகவை கடுமையாக பேசினார். அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோற்கும் என்றும் இனிதான் உண்மையான தேமுதிகவை பார்ப்பீர்கள் என்றும் பேசினார்.
மேலும், சிங்கம் குகையை விட்டு வெளியே வந்து விட்டது இனி வேட்டை ஆரம்பம் என்றும் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் தோல்விக்காக உழைக்கப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், தேமுதிகவை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது.
அதில், துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டமல்ல என்றும், வெளியேறிய துளிகள் தங்களை புலிகள் என நினைத்து வாய் சவடால் அடிப்பது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிகவிற்கு அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்ததே அதிமுகதான்.

முரசு சின்னத்தை பெற்றுக்கொடுத்தது அதிமுகதான். எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்திற்கு கிடைக்கச் செய்ததும் அதிமுக தொண்டர்களின் அயராத உழைப்புதான். தேமுதிக அதையெல்லாம் மறந்து விட்டது ,கடந்த சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
ஊன்றுகோலுடன் நடக்க பழகியிருக்கும் தேமுதிக, இமயமலை போல உள்ள அதிமுக என்னும் பேரியக்கத்தை பார்த்து சவால் விடுகிறது. விஜயகாந்தின் மகன் எலும்பில்லாத நாக்கை வைத்து தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். விஜயகாந்தின் மச்சான் சுதீசும் எங்களை மலேசியாவில கூப்பிட்டாங்க, மானாமதுரையில கூப்பிட்டாங்க என்று ஏகத்திற்கும் வசனம் பேசுகிறார்.
சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கத்துகிற கழுதை கண்ணை திறந்து பார்த்த போதுதான் குப்பைத்தொட்டிக்கு அருகில் இருப்பது புரிய வரும்
அதிமுக என்கிற அன்பியல் இயக்கத்தின் உன்னதம் தேமுதிக என்கிற தேய்ந்து முடிந்து திவாலாகிற கட்சிக்கு புரிய காத்திருக்கிறது.
அதுவரை பேசும்வரை பேசட்டும் அணையப்போகிற நெருப்பாக ஆலவட்டம் போடட்டும் என்று அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.