இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது நீட் தேர்வு? - விஜயகாந்த்
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டார். இவர்களது மரணம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது இந்த நீட் தேர்வு?
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை இரு முறை எழுதியும், மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார்.
அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனையும், துயரமும் அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சி அமைத்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காதது ஏன்?
மணிப்பூர் கலவரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கம் திமுக எம்பிக்கள், நீட் தேர்வு குறித்து பேசாதது ஏன்?‘ என தெரிவித்துள்ளார்.