அதிமுக கூட்டணியில் இருந்து விஜய்காந்த் விலக காரணம் என்ன?
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது என்று சொல்வதை விட விலக்கப்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாமக கூட்டணியில் தக்கவைக்க பெரிய அளவில் முயன்ற அதிமுக தேமுதிகவை கண்டுகொள்ளவில்லை என்றே குற்றச்சாட்டு நிலவுகிறது. தேமுதிக விலகியதற்கும் பாமகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே காரணம் என சுதீஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
கே.பி முனுசாமி அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார் தற்போது இதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளன. தே.மு.தி.க.வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் அனகை முருகேசன் கூறியதாவது, ”துவக்கத்தில் இருந்தே எந்த முக்கியத்துவமும் இல்லை. தொடர்ந்து அவமானப்படுத்தினர்.
இரு அமைச்சர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ம.க.வை கெஞ்சி கூத்தாடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர். பா.ம.க. இருந்தால் தான் எடப்பாடி தொகுதியில் முதல்வரும் திருச்செங்கோட்டில் தங்கமணியும் வெற்றி பெறமுடியும் என்ற சூழல் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு கட்சியை விட இந்த இரு தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் முக்கியம்.
அதனால் பா.ம.க.வை மட்டும் எந்த நிலைக்குச் சென்றும் கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது என முடிவெடுத்தனர். பா.ஜ.வை விட அ.தி.மு.க.வுக்கு பா.ம.க. தான் முக்கியம். இது பா.ஜ.வுக்கும் கூட கோபம் தான். எங்கள் தரப்பில் ஏற்கனவே 2011ல் ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் கேட்கப்பட்டது. எட்டு தொகுதிகளை கொடுப்பதாக கூறினர்.
ஆறு கட்டங்களாக பேசியும் அ.தி.மு.க. தரப்பில் ஏறி வரவில்லை. இறுதி கட்ட பேச்சின்போது 13 தொகுதிகள் கொடுக்கலாம் என்றனர். 24 தொகுதிகளுக்கு கீழ் வேண்டாம் என தொண்டர்களும் மா.செ.க்களும் வலியுறுத்தினர். அ.தி.மு.க. விடாப்பிடியாக மறுக்க கூட்டணி முறிந்து விட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சில் முதல்வரே கோபமாக பேசியிருக்கிறார்.
'மக்கள் மத்தியில் கட்சி எங்குமே இல்லை. 13 தொகுதிகள் என்பதே அதிகம்.'வாங்கிய ஓட்டுக்கள் கட்சியின் நிலை எல்லாமே எங்களுக்கும் தெரியும். 'லேட்டஸ்ட் சர்வே' எடுக்கப்பட்டு உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்' என கூறியிருக்கிறார். எங்களை 'டீல்' செய்த விதத்தை அறிந்தும் பா.ஜ. தரப்பு ஏன் மவுனமாக இருந்தது என புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வுடன் பேச்சு நடக்கும்போதே வழக்கம் போல தி.மு.க.வுடனும் அ.ம.மு.க.வுடனும் தே.மு.தி.க. தரப்பில் கூட்டணி பேசினர். அந்த தகவல் உளவுத்துறை மூலமாக அ.தி.மு.க., தலைமைக்குப் போனது. அதையடுத்து கோபமான முதல்வர் தே.மு.தி.க.வை 'கழற்றி' விட முடிவெடுத்ததாக சொல்கின்றனர்.