’சென்று வா, வெற்றி நமதே’ மகனுக்கு விஜய்காந்த் சொன்ன அறிவுரை என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒருபுறம் கூட்டணி, மறுபுறம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு வருகின்றன. இதற்கிடையே தேமுதிக - அதிமுக இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது.
தேமுதிக விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன் போட்டியிட தேமுதிகவினர் விருப்பமனு அளித்தனர். விருதாச்சலம் தொகுதியில் விஜயகாந்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதாவும், அம்பத்தூரில் விஜயபிரபாகரனும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
வேட்பு மனுக்களில் எந்த தொகுதியில் போட்டி என்பது குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் விருப்ப மனு அளித்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விஜயபிரபாகரன், ”தொண்டர்களின் விருப்பம் அடிப்படையில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
சென்று வா வெற்றி நமதே என்று தனது தந்தை கேப்டன் விஜயகாந்த் தெரிவித்ததாகவும் கூறினார். நான் எந்த தொகுதியில் நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேமுதிக தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அப்பா, அம்மா எந்த தொகுதியில் நிற்க சென்னாலும் அங்கு நிற்பேன். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். நான், விருப்ப மனு மட்டும்தான் தாக்கல் செய்ய வந்தேன்” என்று தெரிவித்தார்.