மீண்டும் விஜயபாஸ்கர் தொகுதியில் பரபரப்பு - வாக்குச்சாவடியில் கிடந்த மர்ம பேப்பரால் சலசலப்பு!
கடந்த 2011ம் ஆண்டுதான் விராலிமலை உருவாக்கப்பட்டது. அங்கு இரண்டு முறை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக அங்கு போட்டி களத்தில் இறங்கினார். விராலிமலை தொகுதி மாத்தூர் பகுதியில் உள்ள 27வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சீல் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்திருக்கிறது.
இதை பார்த்ததும் திமுக, அமமுக வேட்பாளர்களும் பூத் ஏஜெண்டுகளும் அதிர்ச்சி அடைந்தார்கள். வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகப்பட்டார்கள். உடனே இது குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்தனர்.

இதனையடுத்து இதற்கு விளக்கமளித்த மாவட்ட தேர்தல் அலுவலர், “வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது, விவிபேட் கருவியிலிருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து, அதன் மீது ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும்.
அந்த பேப்பர் சீல்தான் தவறுதலாக இங்கு இருந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்தார்.
அவர் சொன்ன விளக்கத்தை கட்சியினர் ஏற்க மறுத்து விட்டனர். உடனே வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறைக்குச் சென்று அவர்களிடம் காட்டப்பட்டது. அதற்குப் பின்னர்தான் அவர்கள் திரும்பிச் சென்றனர்.