இனி வேட்டை ஆரம்பம்... எங்க அப்பாவை சிம்மாசனத்தில் அமர வைப்பேன்: விஜயகாந்தின் மகன் ஆவேசம்
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய பின்னர், அடுத்து என்ன நடக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் ஆவேசமாக உரையாற்றியுள்ளார். அதில், சிங்கம் குகையிலிருந்து வெளியேறியது. இனி வேட்டைதான். இனி நாம் சுதந்திரப் பறவை. தேமுதிகவைக் குறைவாக எள்ளி நகையாடியவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
தேமுதிகவின் பலத்தை மீட்டெடுக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, எங்கு நாம் விட்டோமோ அதை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். 10 சதவீத வாக்குகளை மீண்டும் பிடித்து நிரூபிக்க வேண்டும். என்னை விஜயகாந்தின் மகனாகப் பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாகப் பாருங்கள். 'நண்பா', 'மச்சான்', 'தோழா' என அழையுங்கள்.
எனக்கு தன்னம்பிக்கை அதிகம். உங்கள் உறுதுணையோடு எனது தந்தையை சிம்மாசனத்தில் அமரவைப்பேன். கட்சி பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதுகுறித்து, நாம் அனைவரும் கூடிப் பேசி தீர்வு காண்போம். எதிர்கால எழுச்சி என என்னை நம்புகிறீர்கள் அல்லவா? நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சியின் எதிர்காலத்தை நான் வலுப்படுத்துகிறேன்.
நம்மை விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியல் எனக் கூறுவார்கள். கேப்டனுக்கு சிங்கக் குட்டிகள் போல நாங்கள் இரண்டு பேர் இருக்கிறோம். நாங்கள் ஏன் பேசக்கூடாது. தேர்தல் முடியட்டும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நான் வருகிறேன். இரவு பகலாக உழைப்பதற்கு நான் தயார். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் கொடி தமிழகம் முழுக்க பறக்கும்.
அதான் எங்கள் சொத்து.
டெல்லியில் இருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். நாம், டெல்லிக்குச் செல்வோம். உலக அளவில் தேமுதிகவை எப்படி கொண்டுவருகிறேன் எனப் பாருங்கள். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் விஜய பிரபாகாரனின் ஆக்ஷனை என ஆவேசமாக பேசியுள்ளார்.