“எங்க அப்பாவைத்தான் ஒழித்துக்கட்டினீங்க... என்னையும் ஒழித்து கட்டிவிடாதீங்க” – விஜய பிரபாகரன் ஆவேசம்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து, விஜய பிரபாகரன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது - திமுக, அதிமுக ஆட்சியில் என்னென்ன மாற்றங்களை நீங்கள் பார்த்தீர்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கல்லை காட்டிய உதயநிதி ஸ்டாலினால் கச்சத்தீவிற்கு போய் அங்கிருக்கும் ஒரு பிடி மண்ணை கொண்டு வந்து காட்ட முடியுமா? ஒரு விரலை நீட்டி பேசும்போது, மற்ற 3 விரல்கள் உங்களை நோக்கிதான் காட்டும். அதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த விஜயகாந்த்தை ஒழித்துக்கட்டி விட்டீர்கள். அதேபோல் என்னையும் ஒழித்து கட்டிவிடாதீங்க. என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு உழைக்க நான் தயாராக இருக்கிறேன். ஒரே ஒருமுறை தேமுதிகவுக்கு வாய்ப்புக் கொடுத்து பாருங்கள்.
விஜயகாந்த் தனது சொந்த செலவில், விருத்தாசலத்தில் வளர்ச்சிக்கு உதவி செய்தார். அவ்வாறு பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால், எம்எல்ஏ நிதி மற்றும் ஊதியம் முழுவதும் ஆரணி மக்களின் வளர்ச்சிக்கு பயன்படும்.
மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்ட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நனவாக்க வந்திருக்கிறேன். திமுக, அதிமுக வேண்டாம். ஒரு முறை முரசுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று பேசினார்.