5 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துமதிப்பு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்ந்திருப்பது வேட்புமனு மூலம் தெரியவந்திருக்கிறது. அதாவது, 8.99 கோடி ரூபாயாக இருந்த அவர் சொத்து மதிப்பு 60 கோடியே 30 லட்ச ரூபாயாக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.
விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த முறை தாக்கல் செய்த வேட்பு மனுவில், அசையும் சொத்தின் மதிப்பு ரூ.6,24,32,329 எனக் குறிப்பிட்டார். தற்போது அவருடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.36,72,09,690 ஆக அதிகரித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, விஜயபாஸ்கரின் அசையா சொத்து ரூ.2.75 கோடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.23,57,95,636 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த முறையுடன் ஒப்பிடுகையில், விஜயபாஸ்கரின் கடன் அளவு ரூ.6.80 கோடியாகவும், சொத்தின் மொத்த மதிப்பு ரூ.51,30,72,997 ஆகவும் உயர்ந்துள்ளது. இது அவர் அளித்த வேட்புமனு மூலம் தெரியவந்திருக்கிறது.