என் வீட்டில் இருந்து பணமோ, நகையோ கைப்பற்றப்படவில்லை : விஜயபாஸ்கர் விளக்கம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அந்தச் சோதனையில் தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 4.87 கிலோ தங்கம், 23 லட்ச ரூபாய் பணம், சொத்து பரிவர்த்தனை தொடர்புள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை கொடுத்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், எல்லாருக்கும் என்னைப் பற்றித் தெரியும் நான் கடுமையான உழைப்பாளி. நான் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் ஒரு குடிமகன். என் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், என் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
ஊடகங்கள் சரியாக செய்திகள் வெளியிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நான் அமைச்சராக இருந்தபோது மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் தொடங்கியதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், 1998-ம் ஆண்டே அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2003-ம் ஆண்டே கல்வி நிறுவனங்களைத் தொடங்கிவிட்டோம். 18 ஆண்டுகளாக செயல்படுகிறது.
அதனை ஏதோ இப்போது தொடங்கியதுபோல செய்திகள் வெளிவருகின்றன. ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தற்போது சோதனை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இப்போது முழுவதுமாக பேசமுடியாது. நாளைக்கு செய்தியாளர்களிடம் தெளிவாக பேசுகிறேன். பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள் இதை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அ.தி.மு.கவுக்கு சோதனை என்பது புதிதல்ல.
பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடவேண்டும். சோதனை செய்யப்பவர்களிடமும், சோதனைக்கு உட்படுத்தப்படும் என்னிடம் தகவல்களைப் பெற்று ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும். பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களுக்கு இதுபோன்ற வழக்குகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். கணக்கில் காட்டப்படாத பணம், நகை எதுவும் என்னிடம் கிடையாது. என் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan
