அதிகாரிகள் சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி - அடுத்த நடவடிக்கை என்ன?
ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த இரண்டு முறை விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சரானார்.
தற்போது மூன்றாவது முறையாக இதே தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் தனது குலதெய்வமான குண்டூர் பாலடியான் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பின்னர் ராப்பூசல், திருவப்பூர், இலுப்பூர், திருவேங்கை வாசல் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்த அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று மதியம் முக்கண்ணாமலைப்பட்டி, இலுப்பூரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று முஸ்லிம்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அதனைத் தொடர்ந்து மாலை அன்னவாசல் ஒன்றியம் கோதண்டராமபுரம் ஊராட்சி கீழபளுவஞ்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மயிலாப்பட்டி, கிளாப்பட்டி, பெருமநாடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். இதனையடுத்து, விராலிமலை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி சிக்கி உள்ளது.
பணம், சேலைகள், மளிகை பொருட்கள் வினியோகம் தொடர்பான தகவல் டைரியில் எழுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. விராலிமலையில் அதிமுக கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தார்கள்.