சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நகை பணம் பறிமுதல்

Money Ride Vijaya Baskar C. Gold Seized
By Thahir Oct 19, 2021 05:42 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் தங்கம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (அக்.18) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும், முக்கிய ஆவணங்கள், தகவல்கள் அடங்கிய 19 கணினி வன்வட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்களும் பறிமுதல் செயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்லூரிகள், கல் குவாரி உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் 20 துணைக் கண்காணிப்பாளர்களின் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 30 குழுக்களாகப் பிரிந்து திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.

சென்னையில் உள்ள விஜயபாஸ்கா் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது குடும்ப வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

வீடு மற்றும் அலுவலகம், மதா் தெரசா கல்வி நிறுவனங்களைச் சோந்த 10 இடங்கள், மதா் தெரசா அறக்கட்டளை அலுவலகம், திருவேங்கைவாசல், முத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கல் குவாரிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. தந்தை உள்பட உறவினா்கள் வீடுகள்:

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் தந்தை ரா.சின்னதம்பி, சகோதரா் சி.உதயகுமாா் இல்லங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளா் க.பாஸ்கா், விஜயபாஸ்கா் ஆதரவாளா் பாண்டிச்செல்வன் , குரு, ராஜமன்னாா் ஆகியோரின் வீடு உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 32 இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னையில்..: சென்னையில் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு உள்பட எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.

நுங்கம்பாக்கத்தில் விஜயபாஸ்கா் தந்தை சின்னதம்பி பெயரில் உள்ள வீட்டிலும், மந்தைவெளியில் ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன்ஸ் நிறுவனத்திலும், தியாகராயநகரில் உள்ள வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றன.

பெசன்ட் நகரில் உள்ள அனையா எண்டா்பிரைசஸ், நந்தனத்தில் விஜயபாஸ்கா் உறவினா் சரவணன், வளசரவாக்கத்தில் சீனிவாசன் என்பவா் வீடு உள்பட 8 இடங்களில் சோதனை நடைபெற்றது.

கோவை நஞ்சுண்டாபுரத்தில் விஜயபாஸ்கா் மாமனாா் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுதவிர, செங்கல்பட்டு மாவட்டத்தில் விஜயபாஸ்கா் சகோதரி, அவரது முன்னாள் உதவியாளா் அஜய்குமாரின் வாலாஜாபாத் வீட்டில் சோதனை நடைபெற்றது.