முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அலுவலகத்திற்கு சீல்
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்குத் தொடர்புயை அலுவலகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சந்திரசேகருக்குச் சொந்தமான அலுவலகத்தில் இன்று காலை சோதனையிடச் சென்ற போது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், அலுவலகத்துக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 27.22 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சோத்த புகாரின் பேரில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வீடு உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
இச்சோதனையில், ரூ.23 லட்சத்து 82,700 ரொக்கம், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் விஜயபாஸ்கா் தன் பெயரிலும், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினா் பெயரிலும் சொத்துகளை வாங்கி வைத்திருப்பதும்,
அந்த சொத்துகள் முறையான வருவாயில் வாங்கப்படாமல் பிற வழிகளில் வாங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. 50 இடங்களில் சோதனை:
சென்னையில் 8 இடங்கள், புதுக்கோட்டையில் 32 இடங்கள், திருச்சிராப்பள்ளியில் 4 இடங்கள், மதுரை, காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடம், கோயம்புத்தூா், செங்கல்பட்டில் தலா 2 இடங்கள் என்று மொத்தம் 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை காலை சோதனையை தொடங்கினா்.