முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரளப் பெண் ரூ.11 கோடி மோசடி புகார்
தமிழக சுகாதாரத் துறை முன்னாள்அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ரூ.11 கோடி மோசடி செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த பெண், திருநெல்வேலி சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிபாடு, பிளாப்புழா என்ற இடத்தைச் சேர்ந்த ராஜிவ், இவரது மனைவி ஷர்மிளா ஆகியோர், கேரளத்தில் திருவல்லா மற்றும் பெங்களூருவில் தொழில்நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
ஷர்மிளா தனது குடும்பத்தினருடன் நேற்று காலை திருநெல்வேலி டிஐஜி அலுவலகத்துக்கு வந்தார். அவர் அளித்த புகார்மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், எனது கணவரும் அறிமுகமாயினர்.
பின்னர் எங்களது வீடு, கடைகளுக்கு அவர் வந்து சென்றார். எங்களோடு இணைந்து தொழில் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
எங்களிடம் இருந்த ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதை தொழிலில் முதலீடு செய்வதாகவும் விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, ரூ.14 கோடி மதிப்பிலான நகைகளை 2017 ஜனவரி முதல் வாரத்தில் 3 பகுதிகளாக பிரித்து சென்னை, புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் வைத்து அவர்களிடம் ஒப்படைத்தோம்.
கடந்த 2018-ம் ஆண்டு வேறுதொழில் நிறுவனம் தொடங்குவதற்காக விஜயபாஸ்கரிடம் நகைகளைக் கேட்டபோது, பல்வேறுகாரணங்களைக் கூறி மறுத்துவந்தார்.
2019 மார்ச் மாதத்தில் சென்னையில் தனியார் ஹோட்டலில் வைத்து ரூ.3 கோடியை மட்டும் அளித்துவிட்டு, மீதி பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவதாக விஜயபாஸ்கரும், அவரது நண்பர்களும் மிரட்டினர்.
மேலும் அந்த ஹோட்டலில் 5 மணிநேரமாக எங்களை அடைத்துவைத்து மிரட்டி அனுப்பி வைத்தனர். அதன் பிறகும், மீதித் தொகையைக் கேட்டபோது மிரட்டி வந்தார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் என்பதால் எங்களது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி உடனடியாக அவர் மீதோ, அவரது மனைவி மீதோ அப்போது புகார் மனு அளிக்கவில்லை.
தற்போது, அவர் மீது புகார் அளித்து, சட்டத்துக்கு உட்பட்டு பரிகாரம் தேடிக் கொள்ள, திருநெல்வேலியில் எனது வழக்கறிஞரை சந்திக்கவும், சென்னையில் காவல்துறை இயக்குநர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவும், நீதிமன்றம் செல்லவும் உரிய பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.