மதுரையில் முதலமைச்சர் விஜய்: டிரோன்கள் பறக்க தடை
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை நாளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
முதற்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார்.
தொடர்ந்து 10.25 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதலமைச்சர் விஜய், விமானம் மூலம் நாளை (திங்கட்கிழமை) மதுரை வந்து அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சிகளை முடித்து மீண்டும் சென்னை செல்கிறார். இதன் காரணமாக மதுரை விமான நிலையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், முதலமைச்சர் பயணிக்கும் வழிகள், தங்குமிடம், செல்லும் இடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நாளை டிரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
