நிகழ்ச்சியில் கணவனை ஏளனமாக பேசிய பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல கவிஞர்..!
நிகழ்ச்சியில் கணவனை ஏளனமாக பேசிய பெண்ணுக்கு ஆதரவாக பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை பேசியுள்ளார்.
‘நீயா நானா’ நிகழ்ச்சி
பிரபல விஜய் டிவியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் நீயா நானா. இந்நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சில நேரங்களில் பேசும் பொருளாக மாறுவதுண்டு.
இந்நிலையில், கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், கணவனை விட அதிகம் சம்பாதிக்கு மனைவிமார்களும், அவர்களுடைய கணவன்மார்களும் கலந்து கொண்டார்கள்.
கணவனை ஏளனமாக பேசிய மனைவி
அப்போது, இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண், என் கணவர் மகளின் ரேங்க் கார்ட்டை ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு எதுவும் படிக்கவே தெரியாது என்று ஏளனமாக பேசி சிரித்தார்.
அப்போது கோபிநாத், கணவனிடம் ஏன் நீங்கள் மகளின் ரேங்க் கார்ட்டை ஒரு மணி நேரமா பார்க்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, அந்தத் தந்தை சொன்ன பதில் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. என்னால் முடியாததை என் மகள் சாதித்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் தான் ரேங்க் கார்டை ஒரு மணிநேரம் பார்த்தேன் என்று அவர் கூறியதும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் நெகிழ்ந்து விட்டார்.
இவரை நான் காவியமாக பார்க்கிறேன் என்று கூறி அனைவர் முன்பும் அந்த தந்தைக்கு பரிசு கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது சமூகவலைத்தளங்களில் கணவனை ஏளனமாக பேசிய அந்த பெண்ணை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஆதரவு குரல் கொடுத்த கவிஞர் தாமரை
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ஆதரவாக கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் (சொந்த அனுபவம்).
படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் வீட்டிலுள்ள அனைவரிடமும்! அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்...இன்னும் பல செய்துகள்... கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும்.
உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.
கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து 'பிராக்ரஸ் ரிப்போர்ட்'டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்!” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.