தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை - திமுக கூட்டணியை உடைக்கும் விஜய்
தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ள நிலையில், தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியை விஜய் உடைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணி 74 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை (118 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது.
எந்த ஒரு கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அது தொங்கு சட்டசபை என அழைக்கப்படும்.
இதன்படி அதிக தொகுதிகளை வென்றுள்ள தவெகவிற்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.

தற்போது ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும், 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் எனவும் அந்தக் கடிதத்தில் தவெக தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 எம்எல்ஏ க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2 வாரங்களுக்குள் ஏதேனும் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம். அல்லது அமைச்சரவையில் பங்கு வழங்கப்பட்டு, கூட்டணி ஆட்சி உருவாகலாம்.
திமுக கூட்டணியை உடைக்கும் விஜய்
தனது முதல் மாநாட்டிலே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

திமுக கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி கட்சிகள் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், தேமுதிக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தன.
விஜய் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டால் அது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
"தமிழக தேர்தல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதனால், தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியை விஜய் உடைக்க உள்ளார்.