எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம்
நன்றிக்கடனை தீர்த்து விட்டுத்தான் போவேன் என விஜய் பேசியுள்ளார்.
ஜன நாயகன் இசை வெளியிட்டு விழா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் தனது கடைசி படமான ஜன நாயகன் இசை வெளியிட்டு விழா நேற்று மலேசியாவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்வில், விஜய்யின் தாய் ஷோபா, சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா பாடலை பாடகர் திப்புவுடன் இணைந்து பாடினார்.
விஜய் தனது பங்கிற்கு தளபதி கச்சேரி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
நன்றிக்கடனை தீர்த்து விட்டுத்தான் போவேன்
இதைத்தொடர்ந்து பேசிய விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் சினிமாவுக்கு வரும்போது எதிர்கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. நான் எதிர்கொள்ளாத அவமானங்கள் இல்லை. நிறைய காயங்களை தாண்டிதான் வந்திருக்கிறேன்.

அந்த மாதிரி நாட்களில் எல்லாம் முதல் நாளில் இருந்தே என்னுடன் நின்றது என் ரசிகர்கள்தான். ஒரு நாள், 2 நாள் இல்லை. 33 ஆண்டுகளாக எனக்காக நின்ற அவர்களுக்காக அடுத்த 33 ஆண்டுகளுக்கு நான் நிற்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனக்கு ஒன்னுனா தியேட்டர் வாசல்ல வந்து நிக்கிறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒன்னுனா, அவங்க வீட்ல போய் நிப்பேன். எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். நான் சும்மா நன்றி சொல்லிட்டு போறவன் இல்லை. நன்றிக்கடனை தீர்த்து விட்டுத்தான் போவேன்.
2026-ல் வரலாறு திரும்புகிறது
வாழ்க்கையில் வெற்றி பெற உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வலுவான எதிராளி தேவை. சும்மா வருபவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? வலுவாக இருப்பவர்களைதானே எதிர்க்க முடியும். அப்போதுதானே நாம் ஜெயிக்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்று அர்த்தம்.
விஜய் தனியா வருவாரா, அணியாக வருவாரானு சமீபத்துல ஒரு பேச்சு வந்தது. நம்ம எப்போ தனியா இருந்திருக்கோம். 33 வருஷமா மக்களோட தானே இருக்கேன். அது அணிதானே?
இப்போது கூட வெளிப்படையாக எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாரே என்ற கேள்வி எழலாம். சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால் தானே கிக் இருக்கும். 2026-ல் வரலாறு திரும்புகிறது. மக்களுக்காக அதை வரவேற்க தயராக இருப்போம்" என பேசியுள்ளார்.