திமுக, அதிமுகவை கிண்டலடித்த விஜய்: என்ன பேசினார்?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்த தவெக-வால் மட்டுமே முடியும் என விஜய் தெரிவித்துள்ளார்.
பனையூர் அலுவலகத்தில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது, இதில் கலந்து கொண்டு கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், 2017ஆம் ஆண்டிற்கு பின்னர், 2021ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்தின் நிலையை எண்ணி பார்க்கும் மக்கள், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என கண்ணீர் சிந்துகின்றனர்.

திருவள்ளுவர் மட்டும் இன்று இருந்திருந்தால் திமுகவை பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் தெரியுமா? கற்பனையாக தான் சொல்கிறேன். அது என்னவென்றால் அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என்றார்.
சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டுமே முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை அப்படியே இருக்கட்டும்.
மாபெரும் மக்கள் சக்தியாக நம்முடைய அணி ஒருபக்கம், திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் மறுபக்கம், அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர் என கூறி அதிமுகவை கிண்டலடித்தார்.

”ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியா வா” என்று கூறுகின்றனர்.
இதையெல்லாம் கேட்கும் போது, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற விஜய்யை வெளியே கூப்பிடுகிறார்களே? என எண்ணத் தோன்றுகிறது.
நிச்சயம் வெளியே வருவார்கள். தேர்தலின் போது வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வருவர் என தெரிவித்தார்.