நாடகம் ஆடுவதில்தான் கில்லாடி ஆச்சே.. இங்க வேணானு சொல்றேன் - அரசை விளாசிய விஜய்
விஜய், பரந்தூரில் பேரணி மேற்கொண்டார்.
விமானநிலைய விவகாரம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று கூறி, மக்கள் பலர் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். 950 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று பரந்தூர் போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க அங்கு சென்றார். அப்போது அங்கு உரையாற்றிய அவர், “பரந்தூரில் இருந்து என்னுடைய கள அரசியல் பயணம் தொடங்குகிறது. விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டுவிட்டு அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளேன்.
பரந்தூர் போராட்டம் பற்றி ராகுல்னு ஒரு சின்ன பையன் பேசியதை கேட்டேன். அந்த குழந்தையோட பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டுமென தோணுச்சு. உங்களோடு பேச வேண்டுமென தோணுச்சு. உங்கள் எல்லார் கூடவும் தொடர்ந்து நிற்பேன் என சொல்ல வேண்டுமென தோணுச்சி.
விஜய் பேச்சு
உங்கள் வீட்டு பிள்ளையாக சட்டத்திற்கு உட்பட்டு உங்களுடன் உறுதியாக நிற்பேன். மக்கள் நம்பும் வகையில் நாடகம் ஆடுவதில் திமுக அரசு கில்லாடி. விமான நிலையத்தை தாண்டி இந்த திட்டத்தில் ஏதோ ஒரு லாப உள்நோக்கம் உள்ளது. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, ஏர்போர்ட்டே வரக்கூடாதுனு சொல்ல வில்லை.
இங்கு வரக்கூடாதுனு தான் சொல்கிறேன். விவசாய நிலங்களை அழிக்கும் அரசு நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்கும். 13 ஏரிகளை அழித்து நிறைவேற்றப்பட உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்.
பரந்தூர் விமான நிலையத்திற்காக 13 ஏரிகளை அழித்தால் சென்னை வெள்ளக்காடாகும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்த நீங்கள் தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.