இந்த தற்குறிகள் ஒன்று சேர்ந்து வாழ்நாள் முழுக்க... - எச்சரித்த விஜய்
உங்கள் கொள்கையே கொள்ளை அடிப்பது தானே என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.

11 மணிக்கு நிகழ்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 10;30 மணிக்கு நிகழ்விற்கு வந்துள்ளார். இந்த நிகழ்விற்கு, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே தான் ஆரம்பித்த கட்சியில் அறிஞர் அண்ணா அவர்களை வைத்தவர் எம்ஜிஆர்.
ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்கு பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பன்னுகிறார்கள் என நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன?
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லைங்க. அப்படியே இருந்தாலும் அதை நாம கண்டுக்க போறதும் இல்லைங்க. தனிப்பட்ட முறையில் அவங்களுக்கு வேணும்னா நம்ம மீது வன்மம் இருக்கலாம்.
நம்மளுக்கு அப்படி எதுவும் இல்லைங்க. ஆனா உங்களை என்னை, நம்ம எல்லாரையும் பொய் சொல்லி நம்ப வச்சு ஒட்டு போட வச்சு ஏமாத்துனாங்கள்ல. அப்படி ஏமாத்தி ஆட்சிக்கு வந்து நல்லது செய்ற மாதிரி நடிக்கிறாங்கல்ல அவங்கள எப்படி கேள்வி கேட்காம இருக்க முடியும்? கேள்வி கேட்காம விடப்போறது இல்லை.

இதை ஏன் காஞ்சிபுரத்தில் இருந்து சொல்கிறேன் என்றால் தெரிந்தோ, தெரியாமலோ இதை ஏன் இந்த மாவட்டத்திற்கும் நமக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. நம்முடைய முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்துதான்.
கொள்கையே கொள்ளை தானே
மக்களிடம் செல் என சொன்ன அண்ணாவை மறந்தது யார்? கொள்கை என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் முதல்வர் நம்மை பார்த்து கொள்கை இல்லாதவர்கள் என்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள தவெகவிற்கு கொள்கை இல்லையா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூறிய தவெகவிற்கு கொள்கை இல்லையா?

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறிய நமக்கு கொள்கை இல்லையா? கட்சி தொடங்கும் முன்னரே CAA சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா?
கொள்கையை வெறும் பேச்சளவில் மட்டுமே வைத்துக்கொண்டு, அனைத்து கொள்கைகளையும் இவர்கள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல், இவர்களின் கொள்கையே கொள்ளை தானே!
எங்கள் கட்சி சங்கரமடம் இல்லை என சொன்னது யார்? தற்போது உங்கள் கட்சியில் நடப்பது என்ன! பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர்கள் போல் நடிப்பதை பார்த்து நாடே... பாப்பானு சொன்னோம். பாப்பா என்பது ஆசையாக, பாசமாக சாப்ட்டா தான் சொன்னோம். அதையே நீங்க அதிர்ச்சியா எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்றது?
நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் அலறினால் என்ன செய்வது? உங்கள் அரசவை புலவர்கள் யாராவது இருந்தால் கர்சீஃப் கொண்டு அவங்க கண்ணீரை துடைத்துவிடுங்கள்.
காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் பட்டு உலகளவில் புகழ் பெற்றது. ஆனால் அதை செய்யும் நெசவாளர்களின் ஊதியம் வெறும் ரூ.500 மட்டுமே. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் 60 ஆண்டுகளாக உள்ளது. ஒரு அரசால் புதிய இடம் தேர்வு செய்து பேருந்து நிலையம் கூட கட்டி தரமுடியாதா?
மக்கள் எல்லோருக்கும் உங்களை பொறுத்தவரை தற்குறிகளா? அதே மக்களின் வாக்குகளை வாங்கும் நாம் தற்குறிகள் என்றால், இத்தனை ஆண்டுகள் அந்த மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிய நீங்கள் யார்?
நீங்கள் சொல்லும் இந்த எல்லாம் ஒண்ணா சேர்ந்துதான் வாழ்நாள் முழுக்க, விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலையே கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்கள் யாரும் தற்குறிகள் கிடையாது. தமிழக அரசியலின் ஆச்சரியக்குறி. தமிழக அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி" என பேசியுள்ளார்.