நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் - அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு
திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர போலீஸார் நேற்று (17-ம் தேதி) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்,
கடந்த 7-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திரைப்பட நடிகர், விஜய் சேதுபதி, தேவர் அய்யா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூ.1,001 வழங்கப்படும் என பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு அமைதி மீறுதலை தூண்டும் வகையிலும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே, இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்,
கடைவீதி போலீஸார் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்ற அவமதிப்பு செய்தல், இரு தரப்பினரிடையே மோதலை தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கப்பட்டு வருகிறது,’’ எனக் கூறப்பட்டுள்ளது.