விஜய் சேதுபதி மீது போடப்பட்ட வழக்கு - சமரசமாக செல்ல நீதிமன்றம் அறிவுறுத்தல்...!
நடிகர் விஜய் சேதுபதி தொடர்பான வழக்கில், சமரசமாக செல்ல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி மீது போடப்பட்ட வழக்கு
கடந்த 2021ம் ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மகா காந்தி என்பவர் தாக்கினார். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, நடிகர் விஜய்சேதுபதி மீது மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு மனுவில்,
‘நான் மைசூருக்கு சென்றபோது நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை வாழ்த்தினேன். ஆனால், அவர் என் வாழ்த்தை ஏற்க மறுத்துவிட்டார். சாதியைக் குறிப்பிட்டுத் தவறாகப் பேசினார்.
மேலும், விமான நிலையத்திலிருந்து வெளியேறிய என்னை விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தாக்கினார். அவர்கள் இருவரையும் குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் சம்பந்தமாக நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உரிய ஆதாரம் இல்லாமல் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விஜய் சேதுபதியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது செல்லாது என்று கூறி இந்த இந்த வழக்கை ரத்து செய்தது.
நீதிமன்றம் அறிவுறுத்தல்
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சமரசமாகப் பேசி தீர்வு காணுங்கள். இருவரும் சமாதானமாகச் செல்வதாக இருந்தால் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சமாதான பேச்சு குறித்து வரும் மார்ச் 2ம் தேதி இரு தரப்பினரும் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.