அதிமுக கூட்டணியில் இணைகிறோமா? இஃப்தார் நிகழ்வில் விஜய் விளக்கம்
மதச்சார்பற்ற கொள்கையில்எப்போதும் சமரசம் கிடையாது என விஜய் பேசியுள்ளார்.
தவெக இஃப்தார் நிகழ்வு
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த இப்தார் விருந்தில் கலந்துகொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று காலை முதல் விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவை அணிந்திருந்த விஜய், பந்தியில் அமர்ந்து நோன்பு உணவை சாப்பிட்டார்.
தவெக தலைமையில் ஆட்சி
இதனை தொடர்ந்து பேசிய அவர், "நாம அரசியலுக்கு வந்ததில் இருந்தே நம்மை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள். நாம் அந்த டீம், இந்த டீம் என பேசி வந்தார்கள்.

ஆனால் நாம் மக்களின் டீம் என தெரிந்ததும், அந்த கட்சியுடன் கூட்டணி சேரப்போகிறார் என பேச தொடங்கினர். இதை கேட்டு நீங்களும் குழம்பியிருக்கலாம்.
நம்முடைய மதச்சார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. நம்முடைய தலைமையில் ஆட்சி அமையும். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம்.
எல்லா வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை நம்மால் அடைய முடியும். என்னுடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என கூறினார்.
கடந்த சில நாட்களாக அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், யாருடனும் கூட்டணி இல்லை என விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.