திருமாவளவன் மனம் முழுக்க இனி நம்முடன்தான் - விஜய் பேச்சு
திருமாவளவன் கூட்டணி அழுத்தத்தால்தான் விழாவில் கலந்து கொள்ளவில்லை என விஜய் பேசியுள்ளார்.
அம்பேத்கர் புத்தக வெளியீடு
அம்பேத்கர் நினைவு நாளான இன்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஜய்
'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் முதல் பிரதியை தவெக தலைவர் விஜய் வெளியிட, ஆனந்த் டெல்டும்டெ பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய தவெக தலைவர் விஜய், அத்தனை சக்திகளும் தடையாக இருந்த போது 100 ஆண்டுகளுக்கு முன்னே நியூயார்க் சென்று படித்த அசாத்தியமானவர் அம்பேத்கர். எத்தனை தடைகள் வந்தாலும் படி என்று சிறுவயதிலேயே வைராக்கியம் கொண்டவர் தான் அம்பேத்கர்.
ஜனநாயக உரிமைகள் தினம்
வன்மத்தை மட்டுமே காட்டிய நாட்டிற்கு நாம் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசனத்தை தந்தவர் அம்பேத்கர். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஐ ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்.
இன்றும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதை கண்டுகொள்ளாமல் அரசு நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது. மத்தியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் இவ்வளவு ஆண்டுகள் தாண்டி ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பாதுகாப்பை, மக்களை உண்மையாக நேசிக்கும் ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும். இது அமைந்தாலே போதும். அதனால், இங்கு தினம் நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவது, மழை நீரில் நின்று புகைப்படம் எடுப்பது இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
திருமாவளவன்
ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான தேர்தல். சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். மக்கள் உணர்வுகளை மதிக்கத்தெரியாத, கூட்டணி கணக்குகளை நம்பி, 200 வெல்வோம் என்ற இருமாப்புடன் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்கள் சார்பாக நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து கூட்டணி கணக்குகள் அத்தனையும் 2026இல் மக்களால் மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
விசிக தலைவர் திருமாவளவன் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பது புரிகிறது. அவரது மனது இனி முழுக்க முழுக்க நம்முடம் தான் இருக்கும்" என பேசினார்.