2026ல் திமுக vs தவெக இடையில் மட்டுமே போட்டி - தவெக கூட்டத்தில் பொங்கிய விஜய்!
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று விஜய் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில்,
திராவிட மாடல் என்று மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சியை போல் நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக ஏராளமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநாடு தொடங்கி புத்தக வெளியீட்டு விழா, 2வது ஆண்டு விழா, இப்போது பொதுக்குழு வரை எத்தனை தடைகளை உருவாக்குகிறார்கள்?
விஜய் பேச்சு
அத்தனை தடைகளை கடந்தும் தவெக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை யாராலும் தடுக்க முடியாது. ஓட்டுக்காக காங்கிரஸ் உடன் கூட்டணி, ஊழலுக்காக பாஜகவுடன் மறைமுக கூட்டணியை திமுக வைத்துள்ளது. தமிழ்நாடு என்றால் ஏன்ஜி உங்களுக்கு அலர்ஜி?
ஜிஎஸ்டி வருமானத்தை வாங்கி கொண்டு, நிதியை வழங்க மறுக்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று தொடங்கிய போதே உங்களின் திட்டம் தெரிந்துவிட்டது.. தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாள வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு பலருக்கும் தண்ணி காட்டிய மாநிலம்.
2026ல் தமிழ்நாடு சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தல் 2 பேருக்கு இடையிலான போட்டி மட்டும்தான்.. அது ஒன்று தவெக, மற்றொன்று திமுக எனத் தெரிவித்துள்ளார்.