விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: 3வது முறையாக நாளை நீதிமன்றத்தில் விசாரணை
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த விஜய் - சங்கீதா தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் - சங்கீதா வழக்கு
பின்னர், இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 பக்க மனுவில், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முந்தைய விசாரணையின்போது, இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகாத நிலையில், இரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், அவர்கள் நேரில் ஆஜராவதில் பாதுகாப்பு மற்றும் பிற நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நாளை (ஜூன் 15) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையிலும் இருவரும் ஆஜராகாத நிலையில், நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.