பள்ளியில் ஒளிபரப்பப்பட்ட விஜய், ரஜினி படங்கள் - மாணவிகளிடம் வசூல் வேட்டை
பள்ளியில் விஜய் ரஜினி படங்கள் ஒளிபரப்பப்பட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் திரைப்படம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வி.கே.புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த சனிக்கிழமை (09.11.2024) மதியம் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதை தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ரூ.25 கட்டணம்
இதற்காக ரஜினி படத்துக்கு ரூ.10 விஜய் படத்திற்கு ரூ.25 மாணவ மாணவிகளிடம் கட்டாயமாக வசூல் செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும், தட்டிக் கேட்டால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என கருதி யாரும் புகார் அளிக்கவில்லை.
தகவலறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் புதிய படங்களை பள்ளியில் ஒளிபரப்ப அனுமதி உள்ளதா? பள்ளி நிர்வாகம் வசூல் வேட்டையில் இறங்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தலைமை ஆசிரியர் விளக்கம்
இதனையடுத்து கல்வி துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவ மாணவிகளுக்கு மனதளவில் உள்ள அழுத்தத்தை குறைப்பதற்காகவே திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது என பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்திற்காக வசூலளித்த பணத்தை திருப்பியளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.