திமுகவிடமிருந்து பதில் வராது - திருச்சி பிரச்சாரத்தில் கேள்விகளை அடுக்கிய விஜய்
திருச்சி பிரச்சாரத்தில் விஜய் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மையமாக வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
விஜய் திருச்சி பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று திருச்சியில் இருந்து தொடங்கினார்.
இதற்காக சென்னையில் இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். அங்கிருந்தது தனது பிரச்சார வாகனம் மூலம், பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த மரக்கடை பகுதிக்கு சென்றார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்ததால், திருச்சி சாலைகள் போக்குவரத்து நெரிசலால் முடங்கியது.
10;30 மணி முதல் 11;00 வரை பேச அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரது வாகனம் தொண்டர்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றதில், விஜய் பிரச்சார இடத்திற்கு செல்ல மதியம் 3 மணி ஆனது.
அவர் பேச தொடங்கியதும் மைக் பிரச்சினையால் சிறிது இடையூறு ஏற்பட்டது.
திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை
அதன் பின்னர் வேறு மைக் மூலம் பேச தொடங்கிய அவர், "அடுத்த ஆண்டு நடைபெறுவது ஜனநாயக போர். அந்த காலத்துல போருக்கு போவதற்கு முன்பு குல தெய்வத்தை வழிபட்டு செல்வார்கள். அதுபோல் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள். 1956 ஆம் ஆண்டு தேர்தலில் திருச்சியில் தான் போட்டியிட அண்ணா விரும்பினார்.
எம்ஜிஆர் 1974 ஆம் ஆண்டு அதிமுக முதல் மாநாட்டை முதலில் திருச்சியில் தான் நடத்த வேண்டும் என்று நினைத்தார். பெரியார் வாழ்ந்த மண். மலைக்கோட்டை பிள்ளையாரை தந்தது திருச்சி மாநகரம்.
2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
இலவச பேருந்து பயணம் செல்லும் பெண்களை ஓசியில்தானே போகிறீர்கள், ஓசி பயணம் என அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1,000 கொடுத்து விட்டு பணம் கொடுத்ததாக கூறி பெண்களை அசிங்கப்படுத்துகிறார்கள்.
திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி
திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே.. செய்தீர்களா? நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்யப்படவில்லை. காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்றார்கள், செய்தார்களா?
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு என கூறினார்களே. செய்தார்களா? பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என சொன்னீர்களே, செய்தீர்களா?
காவரி நீர் பாயும் திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி கண்டறியாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
கிட்னி திருட்டை முறைகேடு என்று கூறுகிறார்கள். டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?
நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வராது. தவெக ஆட்சிக்கு வந்தால் மக்களின் அடிப்படை பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவற்றில் எந்த சமரசமும் செய்யாது.
தவெக ஆட்சி அமைந்தால் நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்" என பேசினார்.
சில நிமிடங்களில் பேச்சை முடித்து விட்டு, அரியலூர் பிரச்சாரத்திற்கு கிளம்பினார்.