நடிகர் விஜய் - பிரஷாந்த் கிஷோர் ரகசிய சந்திப்பு - ரெடியான மாஸ்டர் ப்ளான்? - நடப்பது என்ன?
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், நடிகைகள் சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப கதையில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே 2ம் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.
இது குறித்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில், விஜய்க்கு சால்வை அணிவித்து வீணை ஒன்றை நினைவு பரிசாக அளித்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். மேலும் இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் ஜோகினா பள்ளி சந்தோஷ் குமார் உடனிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை தொடர்ந்து சந்திரசேகர ராவை சந்தித்துள்ளது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில், பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.