“நான்காம் நம்பர்ல ஒரு குத்து.. தேமுதிக தான் எப்போதும் கெத்து” - விஜயபிரபாகரன் பஞ்ச்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகின்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சி மாவட்டமாகி இருக்கிறது. அதைத் தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே விஜயகுமார் இங்கு ஜெயித்தால் கேப்டனே ஜெயிப்பது போன்றது. ஜெயித்த பிறகு 3 மாதத்திற்கு ஒருமுறை தொகுதிக்கு வந்து நானே வேலை செய்கிறேன். விஜயகாந்த் மகனாக நான் இங்கு வரவில்லை. நான் உங்கள் நண்பனாக, மாமனாக, மச்சானாக வந்துள்ளேன். என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேமுதிக தொண்டர்கள் தலையே போனாலும் தன்மானத்தை விட மாட்டார்கள். அதனால் தான் அதிமுக கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறினோம். ஆகவே முரசு சின்னத்தை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. நாம் காசுக்காக மாரடிக்கும் கூட்டம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய நாம் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்று பேசினார்.
பிரச்சாரத்தை பேசி முடிக்கும்போது, நான்காம் நம்பர்ல ஒரு குத்து; கள்ளக்குறிச்சியில் தேமுதிக தான் எப்போதும் கெத்து என்று ரைமிங்காக சொல்லி பிரச்சாரத்தை முடித்தார்.