”விஜய் அரசியலுக்கு வாங்க” - வரவேற்கும் திருமாவளவன்
உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் சுயேட்சையாக போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் 110 இடங்களில் வெற்றி பெற்று அசத்தினர்.
இதனிடையே திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதில் விசிக 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது.அதில் 27 ஒன்றிய கவுன்சிலர் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த ஒத்திகையாக பார்க்க முடியாது. அதேசமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம்.
மேலும் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டேன் என அறிவித்து விட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது என திருமாவளவன் கூறினார்.