சிக்கிய மல்லையா.. செக் வைத்த நீதிமன்றம் கடுப்பில் வங்கிகள்!
இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு இது மிகப் பெரிய வெற்றியாகும்.
இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது லண்டன் உயர்நீதிமன்ற தீர்ப்பினால் மல்லையாவின் சொத்துகளை முடக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாக கூறி நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் வெளிநாட்டு பிரஜைகளை ஒப்படைப்பது தொடர்பான நடைமுறைகளில் தீர்வு ஏட்டப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
இதற்கிடையே விஜய் மல்லையா திவாலானவராக அறிவிக்கப்பட்டதால் உலகெங்கும் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது நிறுவனத்தை உருவாக்கவோ முடியாது.
அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவரால் கடன் வாங்கவும் முடியாது .
இந்த நிலையில் மல்லையா பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கிரடிட் கார்டுகள் மற்றும் சொத்துகள் டிரஸ்டி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.
அந்த அதிகாரி அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து, அவற்றை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.