சர்ச்சைக்கு மத்தியில் 'விஜய் மக்கள் இயக்கத்தின்' அடுத்த நகர்வு - அரசியலுக்கு தயாராகும் விஜய்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னையில் நாளை திறக்கப்படவுள்ளது
விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் அரசியலில் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் 'கல்வி விழா' ஒன்றை நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, தனது அரசியல் வருகைக்கு விஜய் வலு சேர்த்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை குழந்தைகளுக்கான இரவு பாடசாலை தொடங்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல் போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சட்ட ஆலோசனை மையம்
சமீபத்தில் வழக்கறிஞர் அணியை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் ஏழை,எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னையில் திறக்கப்படவுள்ளது. இந்த மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் 'புஸ்சி ஆனந்த்' திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது "ஏழை-எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிபடக்கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூர் கே.கே.நகர் 6வது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் 9ம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் அப்பகுதி மக்கள் மாலை வேளைகளில் சட்ட ஆலோசனைகளை பெறலாம். இதுபோல சென்னையின் இதர பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது" என்று கூறியுள்ளார்.