விஜய் வீட்டின் முன்பு மனைவி மயக்கம்: கோபத்தில் பதவியை தூக்கி எறிந்த ரசிகர்
நடிகர் விஜய்யை பார்க்க முடியாத கோபத்தில் மக்கள் இயக்கம் நிர்வாகி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட்ட 169 வேட்பாளர்களில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணைத் தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் ஈசிஆரில் உள்ள விஜய்யின் பன்னை வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது வெற்றி பெற்றவர்களிடம் நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவையான உதவிகளையும், தேவைகளையும் செய்ய வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பெண் நிர்வாகி ஒருவர் ஆம்பூர் பகுதியில் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வெற்றி பெற்ற பெண்ணின் சார்பில் அவரது அண்ணனும், மாதனூர் மேற்கு ஒன்றிய தலைவருமான எழில் தனது மனைவியுடன் விஜயை சந்திக்க வந்துள்ளார்.
வெகுநேரம் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்ததால் எழிலின் மனைவி மயக்கமடைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாககூறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.