விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - எஸ்.ஏ சந்திரசேகர் மனுவால் ரசிகர்கள் ஷாக்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செய லாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, நடிகர் விஜய் தனது தந்தை தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். இந்தநிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் தரப்பில் வக்கீல் ஆஜராகினர். விஜய் தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் மன்றத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை என்றாலும் விஜய் ரசிகர்களாக பின் தொடர்வதாகவும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.