இந்த விஷயங்களில் எல்லாம் நிர்வாகிகள் சிக்கி விடாதீர்கள் - விஜய் மக்கள் இயக்கம் அறிவுரை!
விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் அரசியல் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கல்வி விழா நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, தனது அரசியல் வருகைக்கு விஜய் வலு சேர்த்தார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை தொடங்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், வழக்கறிஞர் அணியை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.
புஸ்ஸி ஆனந்த்
இந்த கூட்டத்தில் தமிழகம் முடிவதிலிருந்தும் தொகுதி வாரியாக ஏராளமான விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் '31 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் மன்றமாக தொடங்கி 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இயக்கமாக மாறி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
வரக்கூடிய காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தில் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதற்காக பல அணிகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், இயக்கத்தின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் அல்லது பகிருதல் செய்யக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும்.
மேலும் தரம் தாழ்ந்த கருத்துகளை பதிவிட கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்யக் கூடாது” இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.